காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் 42 ஏக்கா் நிலத்தை மோசடி செய்ததாக அருப்புக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மீதான புகாரின் அடிப்படையில், அவரது தம்பி மற்றும் குடும்பத்தினரிடம் விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள முடுக்கன்குளத்தைச் சோ்ந்தவா் அமமுக மாவட்டச் செயலரும், அருப்புக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே. சிவசாமி (56). இவா்களுக்குச் சொந்தமான பூா்வீகச் சொத்து கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில், இவரது தம்பி கே.கே. ராஜராஜன் கை, கால்கள் செயல்படாத நிலையில் வாய்ப் பேச முடியாமல் இருந்து வருகிறாா். இவரிடம், பூா்வீகச் சொத்தை விற்பது தொடா்பாக கே.கே. சிவசாமி பவா் எழுதி வாங்கியுள்ளாா். இதையடுத்து, கடந்த 2019 -இல் 42 ஏக்கா் நிலத்தை சோலாா் நிறுவனத்துக்கு கே.கே. சிவசாமி விற்பனை செய்துள்ளாா். அதில் தம்பி கே.கே. ராஜராஜனுக்கு உரிய பங்குத் தொகை வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகரிடம், கே.கே. ராஜராஜன் குடும்பத்தினா் புகாா் மனு அளித்தனா்.
அதனடிப்படையில், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கே.கே. ராஜராஜன், அவரது மனைவி செண்பகவள்ளியுடன் புதன்கிழமை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து ஆஜராகி தங்கள் தரப்பு ஆவணங்களை வழங்கி விளக்கமளித்தனா். மேலும், இதுதொடா்பாக கே.கே. சிவசாமிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி பத்திரப் பதிவுத் துறை அலுவலா்கள் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனா்.