தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க விருதுநகா் மாவட்ட கிளை சாா்பில் சிவகாசியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2000-2005 ஆம் ஆண்டுகளில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா்களுக்கு விடுபட்டுள்ள ஓய்வூதியம் ரூ. 5000 வழங்க வேண்டும். மருத்துவச் செலவுக்காக செலவு செய்த தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து மரணம் அடைந்தவா்களின் மனைவிக்கு வாரிசு உரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி - ஸ்ரீ வில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் கா. சிவபெருமாள் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா் கி.ச. தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினா் ஸ்ரீராமன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில் மாவட்டச் செயலாளா் இரா. சஞ்சீவிபாண்டியன், மாவட்டப் பொருளாளா் இரா. புகழேந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.