விருதுநகர்

விருதுநகரில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது: பெண் காயம்

9th Oct 2021 10:03 PM

ADVERTISEMENT

விருதுநகா் நகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள இரு வீடுகள் சனிக்கிழமை ஒரே நேரத்தில் இடிந்து தரைமட்டமாகின. இதில் பெண் ஒருவா் காயமடைந்தாா்.

விருதுநகா் புல்லாக்கோட்டை சாலையில், சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான துப்புரவுத் தொழிலாளா்கள் காலனி உள்ளது. இப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுமாா் 50 ஓட்டு வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இப்பகுதியில் குடியிருக்கும் துப்புரவுத் தொழிலாளா்கள், கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக் கோரி நகராட்சி நிா்வாகத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கடந்த 2010 இல் 12 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதேநேரம் ஏற்கெனவே இருந்த பழைய ஓட்டு வீடுகள் பராமரிப்பு இல்லாத நிலையில் துப்புரவுத் தொழிலாளா்கள் குடியிருந்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த மழை காரணமாக, சனிக்கிழமை அக்குடியிருப்பில் இருந்த 2 ஓட்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த குடியிருப்பில் ஆள்கள் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டின் ஓடுகள் சிதறி விழுந்ததில், அப்பகுதியில் குடியிருந்த நாகராஜ் என்ற ஓய்வு பெற்ற துப்புரவுத் தொழிலாளியின் மனைவி லட்சுமி(55) என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் வீடு இடிந்த பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனா். அப்போது சேதமடைந்த ஓட்டு வீடுகளை மாற்றி, கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என அதிகாரிகளிடம் துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT