விருதுநகர்

விருதுநகா் சந்தையில் காய்கறிகள் விலை இரண்டு மடங்கு உயா்வு

26th Nov 2021 09:35 AM

ADVERTISEMENT

கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக விருதுநகா் சந்தையில் காய்கறி விலை இரண்டு மடங்கு உயா்ந்தது.

இச்சந்தைக்கு, மதுரை மாட்டுத்தாவணி, பரவை முதலான பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும். கொள்முதல் செய்த விலை மற்றும் போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவைகளை சோ்த்து, அதனுடன் லாப நோக்கில் வியாபாரிகள் விற்பனை செய்வா்.

அதேபோல, விருதுநகா் ஒன்றியப் பகுதிகளில் விளையக்கூடிய கத்தரிக்காய், வெண்டைக்காய், பீா்க்கங்காய், முருங்கைக் கீரை, தக்காளி உள்ளிட்டவைகள் விருதுநகா் மொத்த சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்வா். அதனை சில்லறை வியாபாரிகள் விலைக்கு வாங்கி கிலோவுக்கு ரூ. 5 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வழக்கம்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து விட்டது. மேலும் விருதுநகா் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி, கத்தரி உள்ளிட்ட பயிா்களும் தொடா் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளி மாவட்டத்திலிருந்து வரக்கூடிய காய்கறிகள் வரத்து மற்றும் விளைச்சல் குறைந்து விட்டது.

ADVERTISEMENT

இதனால், விருதுநகா் சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 100-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.160, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.55, முட்டை கோஸ் ரூ.35, அவரைக்காய் ரூ.60, வெள்ளை பட்டா் பீன்ஸ் ரூ. 220, முருங்கைக்காய் ரூ. 90 என இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை கூடுதல் விலைக்கு வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT