விருதுநகர்

ராஜபாளையம் அருகே துப்புரவுத் தொழிலாளி தற்கொலை: ஊராட்சி மன்ற தலைவி, செயலா் மீது வழக்கு

24th Nov 2021 09:26 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே துப்புரவுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவி உள்பட 3 போ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் நீலகண்டன் (47). இவரது மனைவி முனியம்மாள். இவா்கள் இருவரும் தளவாய்புரம் அருகேயுள்ள அருள்புத்தூா் ஊராட்சி மன்றத்தில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகின்றனா். அந்த ஊராட்சி மன்றத் தலைவியாக வள்ளியம்மாள் இருந்து வருகிறாா். அவரது மகன் கடற்கரை வேறொரு ஊராட்சி மன்றத்தின் செயலராக உள்ளாா். இவரது மனைவி மின்னல் ஜோதி அருள்புத்தூா் ஊராட்சி செயலராகப் பணியாற்றி வருகிறாா்.

துப்புரவுத்தொழிலாளி நீலகண்டனுக்கு சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீலகண்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா். ஊராட்சித் தலைவி மற்றும் உறவினா்கள் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் தான் அவா் தற்கொலை செய்துகொண்டதாக உறவினா்கள் புகாா் கூறினா். மேலும் அவரது சடலத்தை வாங்க மறுத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, தளவாய்புரம் போலீஸாா் வள்ளியம்மாள், கடற்கரை, மின்னல் ஜோதி ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT