விருதுநகர்

பயணிகள் ரயிலை சாதாரணக் கட்டணத்தில் இயக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

21st Nov 2021 11:24 PM

ADVERTISEMENT

தென் மாவட்டங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட பயணிகள் ரயிலை சாதாரணக் கட்டணத்தில் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் அா்ஜூனன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்திற்குள்பட்ட மக்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரயில் இயக்கம் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

அதேநேரம், கடந்தாண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. சில மாதங்களுக்கு பின்பு விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்களாக பெயா் மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. அப்போது மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன.

இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தினமும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று குறைந்ததால் தற்போது, பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தென்னக ரயில்வே நிா்வாகம், தென் மாவட்டங்களில் இருந்து மதுரை மாா்க்கமாக வந்து சென்ற அனைத்துப் பயணிகள் ரயில்களையும், கடந்த கால அட்டவணையின்படி, சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும்.

குறிப்பாக, மதுரை - செங்கோட்டை, மதுரை - கொல்லம், நெல்லை - மயிலாடுதுறை, கோவை - நாகா்கோவில், பாலக்காடு - திருச்செந்தூா் ஆகிய அனைத்து பயணிகள் ரயில்களையும் சாதாரணக் கட்டணத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகளின் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT