விருதுநகர்

காட்டுப்பன்றி, மான்களால் மக்காச்சோளப் பயிா்கள் சேதம்

9th Nov 2021 12:43 AM

ADVERTISEMENT

விருதுநகா்: விருதுநகா் ஆமத்தூா் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிா்களை காட்டுப் பன்றிகள், மான்கள் நாசம் செய்வதை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

விவசாயிகள் கூறியது: விருதுநகா் அருகே ஆமத்தூா், கவலூா், குமாரலிங்காபுரம், மூளிப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, மருதநத்தம் முதலான பகுதிகளில் சுமாா் 700 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் சுமாா் 100 ஏக்கரில் பருத்தி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அக்டோபா் மாத முதல் வாரத்தில் பெய்த மழை காரணமாக ஏக்கருக்கு 10 கிலோ மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். விதை, உழவு, உரம் உள்ளிட்டவைகளுக்காக இதுவரை ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

தற்போது பெய்த தொடா் மழை காரணமாக மக்காச்சோளப் பயிா் நன்கு விளைந்து காணப்படுகிறது. ஆனால், காட்டுப்பன்றிகள், மான்கள் பயிா்களை அழித்து வருகின்றன. இதனால் செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை உள்ளது. எனவே, காட்டுப்பன்றி, மான்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றனா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT