விருதுநகர்

இதுவரை சந்திக்காத படுதோல்வியை திமுக இந்தத் தேர்தலில் சந்திக்கும்: முதல்வர் 

26th Mar 2021 09:42 PM

ADVERTISEMENT

இதுவரை சந்திக்காத படுதோல்வியை திமுக இந்தத் தேர்தலில் சந்திக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம், இந்த தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என பேசி வருகிறார். ஸ்டாலின், இந்த இராஜபாளையம் தொகுதிக்கு வந்து பாருங்கள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று. 
தொடர்ந்து அவதூறு பிரசாரம், பொய்பிரசாரம் செய்து வருகிறார் ஸ்டாலின். இதுவரை திமுக சந்திக்காத படு தோல்வியை இந்தத் தேர்தலில் சந்திக்கும். ஏனென்றால் நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யாத கட்சி தி.மு.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. நாட்டுமக்களுக்கு உழைக்கின்ற கட்சி அதிமுக. ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு தான் பொய் பேசினாலும் மக்கள் நம்பப்போவது இல்லை. 
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதேபோல அதிமுகவின் வெற்றிக்கு இங்குள்ள மக்களே சாட்சி. எல்லாதிசையிலும் மக்கள் வெள்ளம் கடல் போல காட்சி அளிக்கின்றது. இந்த மக்கள் வெள்ளம் அதிமுகவின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கிறது. ஆக ஸ்டாலின் எங்களைப் பற்றி எவ்வளவு தான் விமர்சனம் செய்தாலும், எங்கள் இயக்கத்தை ஒன்று செய்யாது, நாங்கள் மென்மேலும் வளரத்தான் செய்வோம். ஏனென்றால் நாங்கள் உழைக்கின்றோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகின்றோம். 
அதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கின்றது. நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. அதனால் மக்கள் உங்களை மறந்து விட்டார்கள். 10 ஆண்டுகாலம் தி.மு.க ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருக்கின்றபோதே மக்களை மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். ஸ்டாலினுடைய மகன் உதயாநிதி காவல் துறை உயர் அதிகாரி டி.ஜி.பியையே மிரட்டுகிறார். 
இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? எண்ணிப்பாருங்கள். எம்.ஜி.ஆர் அந்த காலத்திலேயே தி.மு.க தீய சக்தி, அந்த தீய சக்தி தி.மு.கவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இன்னமும் தி.மு.க திருந்தவில்லை. அவர்களது அராஜகத்தை திருத்திக் கொள்ளவில்லை. ரௌடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். 
தி.மு.க என்றாலே அராஜக கட்சி. இந்த அராஜக கட்சி மீண்டும் தமிழகத்தில் தலையெடுத்துவிடக் கூடாது. இன்றைக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஜாதிச் சண்டை கிடையாது. மதச்சண்டை கிடையாது. அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தி.மு.க வந்தால் கூலிப்படை வந்துவிடும், உங்களது சொத்து உங்களிடத்தில் இருக்காது. இந்த நிலமை தமிழகத்திற்கு வராமல் இருக்க அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT