விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்புப் பிரார்த்தனையுடன் வழிபாடு நடைபெற்றது.
பந்தல்குடியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அன்பு மாடல் நகரில் உள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோவிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையடுத்து மாட்டுப்பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமையும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதன்படி பகல் ஆரத்தி வழிபாடு நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. சந்நிதானத்திலும், வளாகத்திலும் அழகிய வண்ண மலர்கள் கொண்டு மாடும் பொங்கலும் வரைபடங்களாக, கோலங்களாக இடப்பட்டிருந்தது.
பக்தர்கள் பல்வேறு வித மலர்கள் மற்றும் மலர் மாலைகளையும்,பழங்கள், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, இனிப்புகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பொருட்களையும் அருள்மிகு பாபாவிற்குப் படைத்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
பாபாவிற்கு உகந்த பக்திப் பாடலைப் பாடியபடி பக்தர்கள் வழிபட, தீப, தூப ஆரத்தியும், மலர்களால் அர்ச்சித்து, உணவு படைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டு நிறைவில் பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறவும்,உலக நன்மை வேண்டியும் சிறப்பு 3 நிமிட தியானமும் நடைபெற்றது. பின்னர் வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மலர் பிரசாதம் மற்றும் அன்னதானம் அளிக்கப்பட்டது.
இவ்வழிபாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளரும், கோவில் நிர்வாகியுமான தொழிலதிபர் வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.