விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 73 மையங்களில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு

28th Feb 2021 01:26 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் 73 மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லோதோருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை மத்திய அரசு முக்கியத்துவம் பெறும் மாவட்டங்களாக அறிவித்தது.
 இந்த மாவட்டங்களில் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் தனித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்காக, மாநில அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் 2019-2020 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
 இத்திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 73 மையங்களில் தலா 40 பேர் கற்று வருகின்றனர். இவர்களுக்கு தினமும் இரவு மையத்தின் கல்வி தன்னார்வலர் கற்றுத் தருகிறார். 
இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதி அந்தந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.
 திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மையத்தில் தலைமை ஆசிரியை மற்றும் தேர்வுகூட கண்காணிப்பாளர் சௌ.மேரி மற்றும் கல்வி தன்னார்வலர் வனிதா இத்தேர்வினை நடத்தினர். மையத்தில் கற்ற 40 முதியவர்களும் தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர்.
 ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தண்டாயுதபாணி, பறக்கும் படையின் அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். 
விடைத்தாள்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை வட்டார வளமையத்தில் ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படும். 
மதிப்பெண்கள் அடிப்படையில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு நன்று என ஏ கிரேடு வழங்கப்படும். 40 சதவீதத்திற்கு மேல் மதிபெண்கள் எடுத்தவர்களுக்கு திருப்த்திகரம் என பி கிரேடு வழங்கப்படும். 40 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு முன்னேற்றம் தேவை என சி கிரேடு சான்றிதழ் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 615 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
 

Tags : srivilliputhur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT