திருச்சுழி வட்டம் பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோவில். இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தைமாத சிறப்பு அமாவாசை வழிபாட்டில் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு பால், விபூதி, குங்குமம், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகமும் மேலும் தேன், பேரீச்சம்பழம், வாழைப்பழம் கலந்த கலவை என மொத்தம் 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருச்சுழியில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்க்கான தர்ப்பண சமயச்சடங்குகள் செய்துமுடித்த பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்திருந்தனர்.
இதில் நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.