விருதுநகா் மாவட்ட பால் உற்பத்தியாளா்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி மாவ ட்ட பிரதம பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்ட பால்வளத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். அதில், கிராமப்புற பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு ஆன்லைன் மூலம் பணம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளா்கள் அன்றாட தேவைகளான மாட்டுத்தீவனம், மருத்துவ செலவுக்காக சங்கங்கள் மூலம் முன்பணம் முறையை மாற்ற முயற்சிக்கக் கூடாது. சங்கங்களுக்கு ஆவின் வழங்கும் பால் கொள்முதலுக்கான பணத்தை 10 நாள்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. லிங்கம், நலச்சங்க மாவட்டச் செயலா் வி. பாலமுருகன் உள்பட அச்சங்கத்தை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.