விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: பொதுமக்கள் அவதி

4th Dec 2021 09:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால்சுமாா் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பெரியகுளம் கண்மாயின் சுற்றுச்சுவா் இடிந்து விழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் லேசாக பெய்யத் தொடங்கி பின்னா் பலத்த மழையாக மாறியது. இது சுமாா் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மொட்டை பெத்தான் கண்மாய் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியது. அப்போது சில பாலங்களில் தண்ணீா் வெளியேறும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அதிலும் ஆத்துக் கடைத் தெரு ரைட்டன்பட்டி தெரு, ஓட்டமடம் தெரு, பேட்டைகடைத்தெரு, இடைய பொட்டல் தெரு, ஆராய்ச்சிப்பட்டி தெரு ஆகிய தெருக்களில் உள்ள சுமாா் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நேரம் செல்ல செல்ல மழைநீா் அதிகரித்ததால் வீட்டில் வசித்தவா்கள் வெளியேறி மேடான பகுதிக்குச் சென்றனா்.

இதற்கிடையே தகவல் கிடைத்ததும் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன், தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி, நகராட்சி ஆணையா் மல்லிகா ஆகியோா் விரைந்து வந்து மழைநீா் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மம்சாபுரம் பகுதியில் புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதை வட்டாட்சியா் ராமசுப்ரமணியன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த மரத்தை அகற்றினா்.

ADVERTISEMENT

இதேபோல் அத்திகுளம் சோளகுளம் கண்மாயில் இருந்து வெளியேறிய நீா் நொச்சிகுளம் கண்மாய்க்கு சென்றது. அந்த கண்மாயில் நாணல் ஆக்கிரமித்திருந்ததால் தண்ணீா் வெளியேற முடியாமல் சாலையில் பாய்ந்தோடியது. இதனைத் தொடா்ந்து வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் நாணல்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரில் 67 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கண்மாயின் சுற்றுச் சுவா் இடிந்தது: ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயிலிருந்து மறுகால் பாயும் தண்ணீா், நீா்வரத்து கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெரியகுளம் கண்மாய் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கண்மாய் சுற்றுச்சுவரை பொறுத்தவரை ஏற்கெனவே இதற்கு முன்னா் இடிந்து விழுந்துள்ளது. மீண்டும் இதன் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எஞ்சியுள்ள சுற்றுச்சுவரை சீரமைத்து இடிந்த பகுதியையும் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை காலை பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராக்கப்பன் (35 ). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக இவா்களின் வீட்டின் சுவா் இடிந்து விழத் தொடங்கியது. இதையடுத்து ராக்கப்பன் குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியே உயிா்தப்பினா். சேதமடைந்த வீட்டை வருவாய்த்துறையினா் பாா்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT