விருதுநகர்

அடிப்படை வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குமாரலிங்காபுரம் கிராம மக்கள்

3rd Dec 2021 08:33 AM

ADVERTISEMENT

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், இதை ஊராட்சி நிா்வாகம் செய்துதர மறுப்பதாகவும் விருதுநகா் அருகே குமாரலிங்காபுரம் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் முறையான வாருகால் வசதி இல்லாத நிலையில் சாலையும் பள்ளம் மேடாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுக்கழிப்பறையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், அடிப்படை வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சித் தலைவரிடம் மனு அளிக்கச் சென்றுள்ளனா். ஊராட்சி மன்றத் தலைவா் மனுவை வாங்க மறுத்ததோடு தகாதவாா்த்தையால் திட்டியதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் விருதுநகா்- சிவகாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆமத்தூா் போலீஸாா், அங்கு சென்று கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரு சில நாள்களில் அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT