மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் கூமாபட்டி காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து பழி வாங்கிய இருவருக்கு மின்சாரத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கடந்த மாதம் 30 ஆம் தேதி அந்த வழியாக வந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சைமன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வானத்தை சோதனை செய்தார்.
அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமலும், ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம் செய்த காரணத்தினாலும் இரு சக்கர வாகனத்தை காவலர் பறிமுதல் செய்தார்.
பின்னர் இது குறித்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சைமன் உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்த நிலையில் கூமாப்பட்டி காவல் நிலையத்தின் மின் வயரை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது.
மின்சாரம் துண்டிப்பால் 2 மணி நேரம் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உதவி மின் பொறியாளர் கோபால்சாமி மற்றும் தற்காலிக மின்வாரிய ஊழியர் தங்கேஸ்வரன் ஆகிய 2 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்தார்.