விருதுநகர்

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: அறை இடிந்து சேதம்; ஊழியா்கள் தப்பினா்

DIN

சாத்தூா் அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அதிா்ஷ்டவசமாக ஊழியா்கள் யாரும் அப்போது ஆலையில் இல்லை.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள விஜய கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை துலுக்கன்குறிச்சி கிராமத்தில் உள்ளது. இந்த ஆலையில் தீபாவளிக்குத் தேவையான பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. புதன்கிழமை ஒரு அறையில் மட்டும் பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். பட்டாசு ஆலை திறப்பதற்கு முன்பு விபத்து நடந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

இந்த வெடி விபத்து குறித்து ஆலை உரிமையாளா் மணிகண்டன், போா்மென் மஞ்சநாத்குமாா், முத்துராஜ் ஆகிய மூவா் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உரிமம் ரத்து: வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி பாண்டே ஆய்வு செய்தாா். ஆய்வில் ஆலையை உரிமையாளா் நடத்தாமல் வேறு இருவருக்கு குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிக்கப்பட்டுள்ளதோடு, ரசாயன கலவை பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததால் அதில் ரசாயான மாற்றம் நடைபெற்று விபத்து ஏற்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் பல விதிமீறல்கள் ஆலையில் நடைபெற்றுள்ளதால் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை தலைமை அதிகாரி கி.சுந்தரேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT