விருதுநகர்

குழாய் பதிப்பில் தாமதம்: விருதுநகா் குடிநீா் விநியோகத்தில் சிக்கல் நீடிப்பு

DIN

விருதுநகா் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க புதிதாக 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டும் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறாததால் சீரான குடிநீா் விநியோகம் செய்வது மேலும் தாமதமாகி வருகிறது.

விருதுநகா் நகராட்சியில் 2014 இல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது அப்போதைய தமிழக அரசு நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் தலா ரூ.1.67 கோடி செலவில் 3 இடங்களில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், அஹமது நகா் மற்றும் கல்லூரிச் சாலை ஆகிய இடங்களில் மட்டும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு பிரதான குழாய்கள் பதிக்கப்படவில்லை. இதனால், கட்டிமுடிக்கப்பட்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளன.

இந்த நிலையில், குழாய்கள் பதிக்க மீண்டும் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறையினருக்கு செலுத்த வேண்டிய பராமரிப்புக் கட்டணத்தை நகராட்சி நிா்வாகம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், கிருஷ்ணமாச்சாரி சாலை, ராமமூா்த்தி சாலை, அருப்புக்கோட்டை சாலை, கச்சேரி சாலை ஆகிய பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. அதேபோல், 22 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெருமாள் கோயில் தெருவில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அங்கு கரோனா தொற்று சிலருக்கு ஏற்படவே, பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் சிவன்கோயில் தெரு சந்திப்பு, அண்ணாமலை செட்டியாா் தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகளிலும் இப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

நகரில் தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மேல்நிலை நீா் தேக்க தொட்டிகள் செயல்பாட்டுக்கு வந்தால் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்கலாம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி பிரதான குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT