விருதுநகர்

சென்னை -கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நிற்காததால் பயணிகள் அவதி

DIN

சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சென்னை-கொல்லம் விரைவு ரயில் (வண்டி எண்- 0610), தினசரி இரு மாா்க்கத்திலும் அக்டோபா் 25 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இந்த ரயில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 10 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 1.20 மணிக்கும், விருதுநகருக்கு அதிகாலை 2.23 மணிக்கும், தென்காசிக்கு அதிகாலை 4.37 மணிக்கும் மற்றும் கொல்லத்தை காலை 8.45 மணிக்குச் சென்றடைகிறது. இந்த ரயில் செல்லும் ஊா்கள் அனைத்தும் ரயில்வே துறை வெளியிட்டுள்ள கால அட்டவணையில் உள்ளது. ஆனால், சிவகாசி மட்டும் கால அட்டவணையில் இல்லை. இதனால், இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.

ஆனால், கொல்லத்திலிருந்து சென்னைக்குச் செல்லும்போது இந்த ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: கொல்லத்திலிருந்து சென்னை செல்லும் ரயிலில் சிவகாசி ரயில் நிலையத்தில் 15 முதல் 20 பயணிகள் ஏறுகின்றனா். ஆனால், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும்போது, இந்த ரயில் அதிகாலை சுமாா் 3 மணியளவில் சிவகாசியை அடைவதால், பயணிகள் ஏறுவதில்லை. இதனால், இந்த ரயில் சிவகாசியில் நிறுத்தப்படுவதில்லை எனக் கூறினா்.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: சிவகாசி தொழில் நகரமாகும். தற்போது பண்டிகைக் காலம் என்பதால், அதிகமான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனா். எனவே, பயணிகள் நலன் கருதி, சென்னை-கொல்லம் ரயிலை சிவகாசியில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT