திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றி கிரிவலம் வந்து வெள்ளியம்பலநாதருக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோயில். பழமையான கோயிலான இது, திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க ஒரே குடைவரைக் கோயிலும் இதுவாகும். இக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
இதன்படி முதலாவதாக அன்னாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1008 ருத்ராட்ச அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் சந்தனம், பால், இளநீர், வில்வ இலை, விபூதி, குங்குமம், கஸ்தூரி மஞ்சள், தேன், பேரீச்சம்பழம், வாழைப்பழம் கலந்த கலவை உள்ளிட்ட 21 வகையான சிறப்புப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதும் தீப, தூப ஆராதனைகள் நடந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனையடுத்து கருவறையிலிருந்து சிறப்பு அகல் தீபம் ஏற்றி எடுத்து அதனுடன் கிரிவலம் நடைபெற்றதும், அங்குள்ள சிறு குன்றின் மீதுள்ள மகாதீப குண்டத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சிவநாமம் சொல்லி, முழக்கமிட்டு வழிபட்டனர்.
இதனையடுத்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இவ்வழிபாட்டில் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவனடியாரும், கோயில் பூசாரியுமான ராஜபாண்டி செய்திருந்தார்.