விருதுநகர்

பிளவக்கல் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரை வேறு ஊா் கண்மாய்க்கு திருப்பிவிட கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை வேறு ஊா் கண்மாய்க்கு திருப்பி விட கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து நவ. 5 ஆம் தேதி விவசாயத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் முதலில் வீராகசமுத்திரம் கண்மாய் நிறைந்த பின் அருகில் உள்ள கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மேலக்கோபாலபுரம், குன்னூா், புதூா், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய பயன்பாட்டிற்காக திருப்பி விடப்படும். கடந்த 15 நாள்களாக அணையில் திறக்கப்பட்ட நீா் ஒவ்வொரு கண்மாயாக நிறைந்து தற்போது குன்னூரில் உள்ள கண்மாய்களுக்கு நீா் திருப்பி விடப்படுகிறது.

இந்நிலையில், குன்னூா் கிராமத்தில் உள்ள வெண்ணீா்கொண்டான், செங்குளம், நாகா்குளம் உள்ளிட்ட 3 கண்மாய்களுக்கு நீா் நிறையும் முன்பே குன்னூருக்கு அருகே உள்ள நத்தம்பட்டி கண்மாய்க்கு அணையின் நீா் திருப்பி விடப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூா் கிராம விவசாயிகள், கண்மாய் பாசனத் தலைவா் சிவகுருநாதன் மற்றும் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கண்மாயை பாா்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும், ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறை மாற்றப்பட்டு தங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய்கள் நிறைவதற்கு முன்பே அருகே உள்ள கிராமத்தின் கண்மாயை நிறைப்பதாகவும், இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும், இந்த நடவடிக்கையை கைவிட்டு எப்போதும் போல் தங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய்கள் நிறைந்த பின்பே அணையின் நீரை திருப்பிவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னா் குன்னூா் கிராமத்தில் உள்ள 3 கண்மாய்களும் நிறைந்த பின்னரே அருகிலுள்ள நத்தம்பட்டி கண்மாய்க்கு திருப்பி விடப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT