விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் ஐப்பசி பெளர்ணமி நாளை முன்னிட்டு 1008 ருத்ராபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் கிரிவலம் வந்து மகாதீபம் ஏற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.
பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் குடைவரைக் கோயிலில் ஐப்பசி பெளர்ணமி நாளை முன்னிட்டு சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் சிறப்பு வழிபாட்டுப் பாடல்களை பக்தர்கள் குழு பாடிய வண்ணம் 21 வகைப்பொருட்களால் சிறப்பு அபிஷேக தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 1008 ருத்ராபிஷேகம் நடைபெற்று, தூய பசும்பால் ஊற்றிய 108 சங்குகளை சந்நிதானத்தில் அமைத்து வழிபாடு செய்தபின், சங்குகளிலிருந்த பாலைக்கொண்டு நமச்சிவாயருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து அருள்மிகு வெள்ளியம்பலநாதர் முழுஅலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி தந்தார். பின்னர் கருவறையிலிருந்து சிறப்பு தீபம் ஏற்றி அத்தீபத்துடன் கோயிலைச் சூழ்ந்துள்ள குன்றினை வலம் வந்து(கிரிவலம்) பின்னர் குன்றின் மீதுள்ள மகாதீபக் குண்டத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ஓம் நமச்சிவாய எனும் கோஷத்துடன் பக்தர்கள் கண்டு இறைவனை வணங்கினர். இவ்வழிபாட்டில் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.