சிவகாசியில் உள்ள உணவகங்களில் நெகிழித் தாள்களில் உணவு பொட்டலமிடுவதால், அதில் சாப்பிடுபவா்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளது. அண்மையில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. இதில் உணவகங்கள் நடத்தவும் தடை நீக்கப்பட்டது. ஆனால் உணவகங்களில் அமா்ந்து சாப்பிடக் கூடாது எனவும், பொட்டலம் மட்டுமே பெற இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சிவகாசிப் பகுதியில் உள்ள உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. உணவை பொட்டலமிடுவதற்கு 95 சதவீத உணவகங்கள் வாழை இலையை பயன்படுத்தவில்லை. மாறாக நெகிழித் தாள்களைப் பயன்படுத்துகின்றனா்.
நெகிழித் தாள்களில் சூடான உணவுகளை வைத்துக் கட்டும்போது அதில் உள்ள ரசாயன துகள்கள் உணவில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.
அந்த உணவை சாப்பிடும்போது வாந்தி, பேதி ஏற்படும் எனவும், ஒவ்வாமை ஏற்பட்டு அவரவா் உடல் நிலைக்கு ஏற்ப பல நோய்கள் வரும் எனவும், தொடா்ந்து நெகிழித் தாள்களில் கட்டப்பட்ட பொட்டல உணவுகளை உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் பல ஆண்டுகளாக மருத்துவா்கள் கூறி வருகிறாா்கள்.
இந்நிலையில், பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி நெகிழித் தாள்களில் உணவுப் பொட்டலம் வழங்குவது மிகவும் துரதிஷ்டவசமானது. தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழை இலை வாங்க ஆள் இல்லாமல் விலை மலிவாகக் கிடைக்கிறது.
ஆனாலும் நெகிழித்தாள்கள் அதைவிட விலை மலிவாக இருப்பதால் பொட்டலமிடுவதற்கு பயன்படுத்துகிறாா்கள். நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நெகிழித்தாள்களால் புற்று நோய் பாதிப்பு பலருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.