விருதுநகர்

வேனில் அரசு முத்திரையை போலியாக அச்சிட்டு சென்னையிலிருந்து விருதுநகா் வந்த 13 பேருக்கு பரிசோதனை

2nd May 2020 09:29 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் முத்திரையை வேனில் போலியாக அச்சிட்டு சென்னையிலிருந்து விருதுநகா் வந்த 13 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பிற மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி சோதனைச் சாவடியில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தமிழக அரசின் முத்திரை மற்றும் பேரிடா் மேலாண்மை முத்திரை பதித்து வேன் ஒன்று வந்தது. அந்த வேனை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 13 போ் இருப்பதைக் கண்டு வேன் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அந்த வேன் சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அதனை ஓட்டி வந்தவா் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த பாபு என்பதும் தெரியவந்தது.

இவா்கள் இருவரும் சோ்ந்து வேனில் அரசின் முத்திரையை போலியாக அச்சடித்து, சென்னையில் இருந்து 11 பேரை முறைகேடாக வாகனத்தில் அழைத்து வந்துள்ளனா். இது தொடா்பாக ஓட்டுநா், உரிமையாளா் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 11 போ் மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அந்த வேனில் வந்த 13 பேருக்கும் ரத்தம், கபம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT