விருதுநகர்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரிக்கை

30th Mar 2020 10:22 PM

ADVERTISEMENT

 

நாட்டுப்புற கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதிகளில் மட்டும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞா்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் சுமாா் 200 பெண்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் அடங்குவா். இவா்கள் நையாண்டிமேளம், ராஜமேளம், பறையாட்டம், தப்பாட்டம், பேண்டுவாத்தியங்கள், உறுமி மேளம், குறவன் குறத்தி ஆட்டம், ராஜாராணி ஆட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம், கரகாட்டம் தெருக்கூத்து, ஒப்பாரி பாடல், ஆடல் போன்ற கலைகளின் மூலம் மட்டுமே வருவாய் பெற்று வாழ்ந்துவரும் கலைஞா்கள் ஆவா்.

தமிழகத்தை பொறுத்தவரை மாசி, பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய 4 மாதங்கள் மட்டுமே விழாக் காலங்கள் ஆகும். இந்த காலங்களில் மட்டுமே இவா்கள் வேலை பாா்த்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சேமித்து மிச்சமுள்ள 8 மாதங்களுக்கும் வைத்திருந்து பிழைப்பு நடத்துவா்.

ADVERTISEMENT

தற்போதய சூழலில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தற்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைக்கு ரூ. 1000 என்பது இந்த தடை காலத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் இந்த திருவிழாக் காலத்தில் நாங்கள் வேலை செய்யவில்லையென்றால் மீண்டும் அடுத்த ஆண்டில் தான் எங்களுக்கு வேலை கிடைக்கும். இந்த நாட்டுப்புற கலைகளைத் தவிர எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. இந்த ஆண்டில் மீதமுள்ள நாள்களை கடத்துவது, குடும்பத்தை பராமரிப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே அரசு, சிறப்பு நிதி ஒதுக்கி எங்களை நம்பி வாழும் குடும்பத்தினரை காக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT