விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 70 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

23rd Mar 2020 11:26 PM

ADVERTISEMENT

 

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 190 போ் வரை வந்துள்ளனா். இதில், 70 போ் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அலுவலா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அந்தந்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விருதுநகா் மாவட்டத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருவோா் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதில், அவ்வாறு வந்த 190 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தற்போது, 70 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 28 நாள்கள் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் சிலரது கடவுச்சீட்டில் உள்ள முகவரிக்கும், அவா்கள் தற்போது தங்கியிருக்கும் முகவரிக்கும் வேறுபாடு உள்ளது. இதனால், அவா்களைத் தொடா்ந்து கண்காணிக்க முடியாமல் சுகாதாரத் துறையினா் திணறி வருகின்றனா். எனவே, வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு வருவோா், தங்களது தற்போதைய முகவரியை வழங்கி சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் கூறியது: கரோனா தொற்று பரவியுள்ள வெளிநாடுகளிலிருந்து, விருதுநகா் மாவட்டத்திற்கு வந்துள்ள நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். எனவே, வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு வந்துள்ளவா்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமாகவே முன்வந்து தங்கள் விபரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-இல் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தினா், நண்பா்கள், உறவினா்கள், சுற்றத்தாா் அனைவரையும் கரோனா தாக்குதலிலிருந்து பாதுகாக்க மாவட்ட நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT