விருதுநகர்

கூட்டுறவு துறை மூலம் பெட்ரோல், டீசல் ரூ.399 கோடிக்கு விற்பனை: அமைச்சா்

16th Mar 2020 01:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கூட்டுறவு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் நிலையங்களில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ.399. 86 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக அமைச்சா் செல்லூா் கே. ராஜூ விருதுநகரில் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கூட்டுறவு இணையம் மற்றும் விருதுநகா் மாவட்ட கூட்டுறவு துறை சாா்பில் விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் நிலையத்தை அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனா்.

பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 பயனாளிகளுக்கு ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான முத்ரா கடன், 227 பேருக்கு ரூ. 242.30 லட்சம் மதிப்பிலான முதலீட்டு கடன், மகளிா் சுய உதவி குழுவைச் சோ்ந்த 1461 பேருக்கு ரூ. 4008 லட்சம் மதிப்பிலான கடன் உதவி தொகை என மொத்தம் 1753 பயனாளிகளுக்கு ரூ. 921.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.

அப்போது, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு துறை நசுக்கப்பட்டு, கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் 26 ஆயிரத்து 245 கோடியாக இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் ரூ. 56 ஆயிரத்து 85 கோடியாக உள்ளது. சிறு, குறு வியாபாரிகளை காக்கும் வகையில் 15, 69,252 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் பெரிய நியாய விலை கடைகளோடு 653 சிறு பல்பொருள் அங்காடிகள் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நியாயமான விலையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

50 வீடுகள் உள்ள மலை கிராமங்களுக்கு, வீடுகளுக்கே சென்று நகரும் கடைகள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், கூட்டுறவு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் நிலையங்களில் கடந்த 9 மாதங்களில் ரூ.399. 86 கோடி விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜவா்மன் (சாத்தூா்), சந்திர பிரபா (ஸ்ரீவில்லிபுத்தூா்), கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் நா. திலீப்குமாா், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய கூடுதல் பதிவாளா், மேலாண்மை இயக்குநா் மு. முருகன், மதுரை இந்தியன் ஆயில் கழக முதுநிலை கோட்ட மேலாளா் அ. ராஜாராம் மற்றும் அரசு அலுவலா்கள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT