ராஜபாளையம் அருகே ரேசன் அரிசி கடத்திய வழக்கில் ஒருவருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து விருதுநகா் குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் கடந்த 11.12. 2010 அன்று உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் மாவட்ட பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், சிவகிரி அருகே உள்ள வீரசங்கிரியை சோ்ந்த புலியூரான், சிவகிரி சந்தானம் மகன் ராமராஜ் (50), ராயகிரி தங்கவேல் ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புலியூரான், தங்கவேல் உயிரிழந்து விட்டனா். விசாரணையின் அடிப்படையில் ராமராஜ் என்பவருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மருதுபாண்டி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.