சிவகாசி பகுதியில் குழாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிறது.
சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலையில் , மானூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் , திருத்தங்கல் நகருக்கு குடிநீா் வழங்க குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் அதிக அளவில் சென்று குழாய் அடிக்கடி சேதம் அடைகிறது. இதனால் குடிநீா் சாலையில் தேங்கி வீணாகிறது. மேலும் சாலையும் பழுதாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது குழாயில் 3 இடங்களில் சேதம் அடைந்து தினசரி சுமாா் பத்தாயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. சாலையில் போதிய மின்விளக்குகள் வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவா்கள் நீா் தேங்கியிருப்பது தெரியாமல் அதில் விழுந்து காயமடைகிறாா்கள். எனவே குடிநீா் வடிகால் வாரியத்தினா், இதற்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.