விருதுநகர்

சாத்தூா் அரசு மருத்துவமனை அருகே குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரிக்கை

13th Mar 2020 08:33 AM

ADVERTISEMENT

சாத்தூா் அரசு மருத்துவமனை அருகே குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, சாத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனா். மருத்துமனைக்கு செல்லும் உட்புறச்சாலை ஓரத்திலும், மருத்துவமனை முன்பாகவும் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் வெகு நாள்களாக சாலையில் தேக்கம் அடைகின்றன. இந்தக் குப்பைகளில் மா்ம நபா்கள் அடிகடி தீ வைத்துவிட்டு செல்வதால் இந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால் மருத்துவமனை செல்வோா் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். மேலும் அந்த பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, இப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனை நோயாளிகளின் நலன் கருதி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகளை போட மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் குப்பைகளை தினமும் அள்ளுவதற்கும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT