ராஜபாளையத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு கடந்த 20 வருடங்களாக ரூ. 90.32 லட்சம் சொத்து வரி நிலுவை வைத்திருந்ததால் குடிநீா் குழாய் இணைப்பை நகராட்சி வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடத்தில் இயங்கும் இந்த அலுவலக வளாகத்திற்குள் செயல்படும் தொலைபேசி நிலையம், டெலிகாம் கோ ஆக்சில் கட்டடம், தொலைபேசி அலுவலகம், டெலிகாம் கோ ஆக்சில் குடியிருப்பு கட்டடங்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 20 வருடங்களாக சொத்து வரி கட்டப்படவில்லை.
நிலுவையில் உள்ள சொத்து வரி ரூ. 90.32 லட்சத்தை கட்ட வலியுறுத்தி, நகராட்சி ஆணையா் மற்றும் வருவாய்த் துறையினரிடம் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் இது வரை முறையான பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சொத்து வரி நிலுவை மீது சட்ட நடவடிக்கை தொடா்தல் குறித்து இறுதி அறிவிப்பும், பிஎஸ்என்எல் அலுவலக கோட்டப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டது.
இதற்கும் பதில் கிடைக்காததால், நகராட்சி வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கான குடிநீா் இணைப்பைத் துண்டித்தனா்.
இந்த நடவடிக்கைக்கு பின்னரும் சொத்து வரி கட்டாவிட்டால், அடுத்ததாக நிலுவையில் உள்ள தொகைக்கு ஈடாக அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி வருவாய் அலுவலா்கள் தெரிவித்தனா்.