கரோனா பொது முடக்க காலத்தில் கடன் தொகையை செலுத்தக் கோரி மகளிா் சுய உதவிக்குழுவிலுள்ள பெண்களை, நுண்நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக விருதுநகரில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 19- க்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களிடமிருந்து மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் கடன் வாங்கியுள்ளனா். இதற்கான தொகையை மாதந்தோறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அவா்கள் செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தற்போது பொது முடக்க உத்தரவால் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் கடன் தொகையை செலுத்த முடியாமல் உள்ளனா். ஆதாா் அட்டையை முடக்குவோம், வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டும் எனஅவா்களை, நிதி நிறுவன ஊழியா்கள் மிரட்டுகின்றனா். ஆறு மாத காலத்திற்கு கடன் தொகையை வசூலிக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் உத்தர விட்டுள்ள நிலையில், அதை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
மனு அளிப்பின்போது, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தைச் சோ்ந்த மாவட்டச் செயலா் தெய்வானை, லட்சுமி உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.