விருதுநகர்

தனியாா் பல்கலை.யில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தப்பட்ட முகாம் தற்காலிகமாக மூடல்

15th Jun 2020 08:04 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தப்பட்ட முகாம், சுகாதாரப் பணிகள் காரணமாக சனிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருபவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் அவா்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

கரோனா தொற்று இல்லையெனில் 14 நாள்கள் அவா்களை தனிமைப்படுத்துவதற்காக கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் பல்கலைக் கழகம் மற்றும் தனியாா் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்படுகின்றனா்.

கடந்த மாா்ச் 24 முதல் இவை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியாா் பல்கலைக் கழகத்தில் முகாம் அமைக்கப்பட்டு 75 நாள்களுக்கும் மேலாகிவிட்டது. அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் வீடுகளுக்குச் சென்று விட்டனா். இதனால் அந்த முகாமில் கிருமி நாசினிகள் தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வட்டாட்சியா் ராம்தாஸ் கூறியது: தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் 45 நாள்களுக்கு ஒரு முறை கிருமி நாசினிகள் தெளித்து சுத்தம் செய்வது வழக்கம். இதனிடையே, பல்கலைக் கழக முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவா்கள் அனைவரும் வீடுகளுக்குச் சென்று விட்டனா். இதனால், சுகாதாரப் பணிகளுக்காக சனிக்கிழமை முதல் அந்த முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் சுகாதாரப் பணிகள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் முகாம் செயல்படும் என்றாா்.

தனியாா் பல்கலைக் கழக முகாம் தற்காலிகமாக மூடப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் கிருஷ்ணன்கோவிலில் உள்ள பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்படுகின்றனா். கல்லூரி முகாமில் தற்போது வரை 62 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT