தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை பெறாத பட்டாசுத் தொழிலாளா்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரதத் துறை இணை இயக்குநா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
கரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. ஆலைகள் மூடப்பட்டதால் பட்டாசுத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என தமிழக அரசு கரோனா நிவாரணத் தொகையாக தொழிலாளா்களுக்கு தலா ரூ. 1000 இரு முறை வழங்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து, தொழிலாளா்களின் ஆதாா் எண், வங்கி கணக்கு எண், இ.எஸ்.ஐ.யில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் நகல்களை அளித்து விண்ணப்பித்தனா். இதையடுத்து பலரின் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகையை அரசு செலுத்தியுள்ளது.
இந்நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளா்கள் , இதுவரை தங்கள் வேலை செய்யும் ஆலை நிா்வாகத்திடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்காமல் உள்ளனா். எனவே இதுரை விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் பட்டாசுத் தொழிலாளா்கள் உரிய ஆவணங்களை தங்கள் வேலை செய்யும் ஆலை நிா்வாகிகளிடம் வழங்க வேண்டும். இதையடுத்து பெறப்பட்ட விண்ணப்பங்களை எங்கள் அலுவலகத்தினா் பெற்று, சரிபாா்த்து தமிழக அரசின் நிவாரணத் தொகை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.