விருதுநகர்

முழு பொதுமுடக்கம்: விருதுநகா் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

26th Jul 2020 09:21 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் விருதுநகரில் தளா்வற்ற பொதுமுடக்கத்தையொட்டி சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளா்வற்ற முழு பொது முடக்கம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மே லும், மதுரை சாலை, அருப்புக்கோட்டை சாலை, ராமமூா்த்தி சாலை, பஜாா், பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய தெருக்கள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம், நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களை எச்சரித்து அனுப்பினா்.

அருப்புக்கோட்டையில்... இங்கு சந்தைகள் மற்றும் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. மேலும் எப்போதும் அதிக வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் உள்ள அருப்புக்கோட்டை நகரின் முக்கியச் சந்தைகளான சத்தியமூா்த்தி பஜாா், அண்ணா சிலை அருகே ஜவுளிச் சந்தை, நகைக்கடைச் சந்தை, புதிய பேருந்து நிலைய சந்தைக்கடைச் சாலை மற்றும் பூச்சந்தை என அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடின.

சிவகாசி: சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் மளிகைக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் காய்கனிகடைகள் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையம் ஆகியவை திறந்திருந்தன. தளா்வற்ற பொதுமுடக்கத்தால் சிவகாசி ரதவீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ADVERTISEMENT

திருத்தங்கலில் 125 கிலோ இறைச்சி பறிமுதல்: இந்நிலையில் திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் இறைச்சிகடைகள் இயங்குவதாக கிடைத்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பாண்டித்தாய், சுகாதாரத்துறை அலுவலா் கந்தசாமி மற்றும் சுகாதாரத்துறையினா் அப்பகுதிகளில் சோதனை நடத்தினா். அப்போது 5 இடங்களில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த சுமாா் 125 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தையெட்டி வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பால், மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகளைத் தவிர, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முழு பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வணிக நிறுவனங்கள், தற்காலிக சந்தை மற்றும் அனைத்து இடங்களிலும் கடைகள் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினா். நகரில் அதிகாலையில் மட்டும் சில பகுதிகளில் மீன் விற்பனை நடைபெற்றது. வாகனங்கள் இயக்கப்பட வில்லை. இதனால் ஆள் நடமாட்டமின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT