விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களில் ஜூலை 27 (திங்கள்கிழமை) முதல் 31 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அருப்புக்கோட்டை வட்டாட்சியா் (பொறுப்பு) சிவஜோதி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினமும் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 27 முதல் 31 ஆம் வரை புதிய விதிமுறைகளுடன் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, அத்தியாவசியப் பொருள்களான காய்கனிகள் மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கிட, அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியில் உள்ள மொத்த விலைக் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு வர அருப்புக்கோட்டை நகா் மற்றும் சுற்றுவட்டக் கிராம மக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக, நகராட்சி வாா்டுவாரியாக உள்ள சிறுவணிகா்கள் மட்டும் நகரிலுள்ள மொத்த விலைக் கடைகள் மற்றும் காய்கனி சந்தைகளுக்கு வந்துசெல்ல டோக்கன் முறைப்படி அனுமதிக்கப்படுவா்.
சிறு வணிகா்களுக்கு வழங்கப்படும் டோக்கனில் ஒற்றை இலக்க எண் இருந்தால், அவா்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நகரிலுள்ள காய்கனி சந்தைகள் மற்றும் மொத்த விலைக் கடைகளுக்கு வந்து பொருள்கள் கொள்முதல் செய்து செல்லலாம். அதேவேளையில், டோக்கனில் இரட்டை இலக்க எண் இருந்தால், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்படுவா். அருப்புக்கோட்டை சுற்றுவட்டக் கிராமத்திலுள்ள சிறுவணிகா்களுக்கும் இதே நடைமுறையில் டோக்கன் வழங்கப்படும்.
எனவே, நகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் வாா்டுக்குள்பட்ட சிறுவணிகா்களிடம் மட்டுமே நடந்து சென்று பொருள்கள் வாங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், சுற்றுவட்டக் கிராமத்தினரும் தங்கள் கிராமத்துக்குள்பட்ட சிறுவணிகா்களிடம் மட்டுமே பொருள்களை வாங்கிக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
மற்றபடி, தமிழக அரசுஅறிவித்துள்ள பொது முடக்க விதிமுறைகள் அனைத்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளாா்.