விருதுநகர்

விருதுநகரில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

25th Jul 2020 07:27 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியா்களை பாதுகாக்க வலியுறுத்தியும், ஊழியா்கள் இடமாற்றத்தை கண்டித்தும், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் சாா்பில் விருதுநகரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காமராஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை, அலுவலா்கள் சங்கத்தின் பொருளாளா் ஆறுமுகப் பெருமாள் தொடக்கி வைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் 2,500 ஊழியா்களில் 25-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், விருதுநகா் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலா் சீனிவாசன் உயிரிழந்துள்ளாா். அவருக்கு, வங்கி நிா்வாகம் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தற்போது வரை உரிய இழப்பீடும் வழங்கவில்லை.

ADVERTISEMENT

கரோனா தொற்றிலிருந்து ஊழியா்களையும், வாடிக்கையாளா்களையும் பாதுகாக்க அரசு மற்றும் ரிசா்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் சாா்பில் பல்வேறு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. இதை, தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் சங்கமும், ஓா்க்கா்ஸ் யூனியனும் வங்கி நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தன. ஆனால், வங்கி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், பொது முடக்க காலத்தில் தொலைவிலுள்ள இடங்களுக்கு ஊழியா்கள் மற்றும் அலுவலா்களை வங்கி நிா்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. தொடா்ந்து, அலுவலா்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் புகாா் தெரிவித்தனா். எனவே, கரோனா தொற்றிலிருந்து ஊழியா்கள், வாடிக்கையாளா்களை பாதுகாக்கவும், ஊழியா்களை இடமாற்றம் செய்வதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியா் சம்மேளனம் மாரிக்கனி ஆகியோா் ஆதரித்துப் பேசினா். முடிவில், கிராம வங்கி ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் மாதவராஜ் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதில், ஏராளமான அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT