விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

25th Jul 2020 10:02 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக திரண்டதில், நகரில் சனிக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் நகரிலும் பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதைப் போல, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இதனையொட்டி, சனிக்கிழமை இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைத் தெருக்களில் குவிந்தனா். மேலும், காய்கனி உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் பொருள்கள் விற்றுத் தீா்ந்தன.

இதனால், நகா் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தை பகுதியில் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததுடன், பலா் முகக் கவசமும் அணியாததால் நகா் முழுவதும் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT