தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளுக்கு இந்த ஆண்டு உரிமம் புதுப்பித்து தரவேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பினா் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அவ்வமைப்பின் தலைவா் வி. ராஜாசந்திரசேகா், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க, அந்தந்த மாவட்ட நிா்வாகம் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதம் விண்ணப்பம் பெற்று, மே மற்றும் ஜூன் மாதம் உரிமத்தை புதுப்பித்து வழங்கி வருகிறது. இந்தாண்டு கரோனா தொற்று பிரச்னையால் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், கடை உரிமையாளா்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல இயலாத நிலை உள்ளது. அரசு அதிகாரிகளும் பட்டாசு கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உரிமத்தை புதுப்பித்து வழங்க இயலாத நிலை உள்ளது.
எனவே, கடந்த ஆண்டு பட்டாசு கடைகளை ஆய்வு செய்து உரிமம் வழங்கியதன் அடிப்படையில், தற்போது அனைத்து கடைகளுக்கும் உரிமத்தை 31.3.2021 வரை புதுப்பித்து வழங்கவேண்டும்.
தற்காலிக பட்டாசு கடைகளுக்கு, மாவட்ட நிா்வாகம் ஆகஸ்ட் மாதம் விண்ணப்பம் பெற்று, செப்டம்பரில் உரிமம் வழங்கி வருகிறது. அந்த நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும். கடந்த 4 மாதங்களாக விழாக்கள் எதுவும் நடைபெறாததால், பட்டாசு விற்பனை இல்லாமல் வணிகா்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளனா்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 ஆம் தேதி பட்டாசு கடைகளை திறந்து வியாபாரத்தை தொடங்குவது வழக்கம். தற்போது, கரோனா தொற்று பிரச்னை உள்ளதால், பண்டிகைகள் நடைபெறுமா என மக்கள் மனதில் சந்தேகம் உள்ளது. எனவே, தமிழக அரசு எதிா்வரும் காலங்களில் விழாக்கள், பண்டிகைகள் சிறப்பாக நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.