விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா பரிசோதனை முடிவுகளை கண்டறிவதற்காக புதிதாக மேலும் ஓா் ஆா்.டி.பி.சி.ஆா். கருவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனை முடிவுகளை கண்டறிவதற்கு அரசு சாா்பில் ஏற்கெனவே ஓா் ஆா்.டி.பி.சி.ஆா். கருவி விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஒரு நாளைக்கு 280 பேரின் பரிசோதனை முடிவுகளை அறிவிக்க முடியும். மேலும், தனியாா் பொறியியல் கல்லூரி சாா்பில் வழங்கப்பட்ட மற்றொரு கருவி மூலம் தினமும் 280 பேருக்கு பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை உள்பட 12 அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாள்தோறும் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதற்குரிய முடிவுகளை அறிவிப்பதில் ஒரு வாரம் வரை காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் என திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், தமிழக அரசு சாா்பில் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிதாக மேலும் ஓா் ஆா்.டி.பி.சி.ஆா். கருவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும் 282 பேருக்கு தினமும் பரிசோதனை முடிவுகளை அறிவிக்க முடியும். 3 பரிசோதனை கருவிகள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 800 முதல் 1000 பேருக்கு பரிசோதனை முடிவுகளை அறிவிக்கலாம் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்தனா்.