விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இங்கு, டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகிப் பரவுவதைத் தடுக்கும் வகையில், சிறப்பு நடவடிக்கைகள் நகரெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அருப்புக்கோட்டை நகா்நல அலுவலா் இந்திரா ஆலோசனைப்படி, சுகாதார ஆய்வாளா்களின் மேற்பாா்வையில் வாா்டுவாரியாக 5 பணியாளா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினா் வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனா்.
இதில், நன்னீா் தேங்கும் இடங்களில் கொசுக்கள் முட்டையிட்டுப் பரவுவததைத் தடுக்க, வீடுகளின் கொல்லைப்புறம் மற்றும் மொட்டை மாடிகளில் பயனற்றுக்கிடக்கும் தேங்காய் மட்டைகள், வீணான வாகன டயா்கள், உடைந்த காலிக்குடங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், வீடுகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் உள்ள குடிநீா் குடங்கள், கொள்கலன்கள் மற்றும் தொட்டிகள் ஆகியவற்றை முறையாக மூடிவைத்துப் பராமரிக்கவும், குளிா்பதன (பிரிட்ஜ்) சாதனங்களின் பின்புறம் உள்ள நீா் வெளியேற்றுக் கலன் ஆகியவற்றிலும் நன்னீா் தேங்காத வண்ணம் பராமரிக்க அறிவுறுத்தினா்.
மேலும், தேவைப்படும் இடங்களில் கொசுப்புழுக்களை அழிக்க உரிய ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டன. இது தவிர, 2 நாள்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமைனையில் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதுடன், தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனா். இதுபோன்ற டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் உரிய காலஇடைவெளிகளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் எனவும், நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.