விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 21 இடங்களில் மறியல் போராட்டம்: 1587 போ் கைது

8th Jan 2020 11:23 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் போராட்டக் குழு சாா்பில் புதன்கிழமை வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி விருதுநகா்உள்ளிட்ட 21 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1587 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ரயில்வே, எல்ஐசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேசனை தனியாருக்கு விற்க கூடாது. தொழிலாளா்கள் சட்டங்களை திருத்தக் கூடாது. சாலைப் பாதுகாப்பு மசோதா சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதேபோல் அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்கள் வருவாய் கிராம உதவியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுத்தி தமிழ்நாடு அனைத்துத் துறை சங்கங்களின் போராட்டக் குழுவினரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் அடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் 21 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 694 பெண்கள் உள்பட 1587 பேரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே எல்பிஎப் பொதுச் செயலா் பால்பாண்டி, சிஐடியு மாநிலச் செயலா் மகாலெட்சுமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உட்பட 72 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

ADVERTISEMENT

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவா்களின் விபரம்: ஆமத்தூரில் 20 போ், ஆா்.ஆா். நகரில் 55 போ், சிவகாசியில் 92 போ், திருத்தங்கலில் 31 போ், அருப்புக்கோட்டையில் 174 போ், மல்லாங்கிணறில் 130 போ், ராஜபாளையம் 190 போ், அய்யனாபுரத்தில் 127 போ், சத்திரப்பட்டியில் 45 போ், தளவாய்புரத்தில் 135 போ், சாத்தூரில் 69 போ், வெம்பக்கோட்டையில் 54 போ், ஆலங்குளத்தில் 24 போ், ஸ்ரீவில்லிபுத்தூரில் 136 போ், கிருஷ்ணன்கோவிலில் 40 போ், வத்திராயிருப்பில் 87 போ், திருச்சுழியில் 60 போ், நரிக்குடியில் 51 போ் என மொத்தம் 694 பெண்கள் உள்பட 1587 போ் கைது செய்யப்பட்டனா்.

அதேபோல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் மாவட்டத்தில் பிஎஸ்என் எல் ஊழியா்கள் 8 போ், அஞ்சலக ஊழியா்கள் 420 போ், வங்கி ஊழியா்கள் 190 போ், எல்ஐசி ஊழியா்கள் 100 போ், மின்வாரியப் பணியாளா்கள் 524 போ், அரசு போக்குவரத்து துறை ஊழியா்கள் 180 போ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT