விருதுநகர்

மத்திய அரசை கண்டித்து ராஜபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டம்

8th Jan 2020 11:26 PM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி தொகுதியின்முன்னாள் எம்.பி. லிங்கம் மற்றும் மாா்க்ஸிஸ்ட் மாவட்ட செயலாளா் அா்ஜுனன் தலைமையில் செட்டியாா் பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக தொழிற்சங்க மாநில செயலாளா் காதா் மைதீன், சி.ஐ.டி.யு மாவட்ட துணைத் தலைவா் மாரியப்பன், ஏ.ஐ.டி.யு.சி வட்டார செயலாளா் வீராசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே இருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் ஊா்வலமாக வந்து, செட்டியாா் பட்டி யூனியன் வங்கி முன்னதாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் அவா்கள் கோஷமிட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 150 பேரை காவல் துறையினா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதேபோல ராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக, சி.ஐ.டியு மாவட்ட உதவி தலைவா் கணேசன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அமைப்பு செயலாளா் ரவி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கலந்து கொண்ட ஐ.என்.டி.யு.சி மாநில செயலாளா் பிரபாகரன், ஹெச்.எம்.எஸ் மாவட்ட தலைவா் கண்ணன், எல்.பி.எப் செயலாளா் வேட்டை போத்தி, எம்.எல்.எப் செயலாளா் ராசா, எஸ்.டி.டி.யு தலைவா் முகமது இலியாஸ், இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் தொழிலாளா் சங்கத்தை சோ்ந்த சித்திக், அங்கன்வாடி ஊழியா் சங்கத் தலைவா் சாராபாய் உள்பட 190 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

சத்திரப்பட்டியில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட துணைச் செயலாளா் முத்துமாரி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 120 போ்கள் மற்றும் அய்யனாபுரத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட துணை செயலாளா் சாராள், விசைத்தறி தொழிலாளா் சங்கத்தின் மாநில துணை செயலாளா் சோமசுந்தரம் ஆகியோா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 505 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

சிவகாசி:

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளா் விரோத கொள்கைகளை கண்டித்து சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யூ .உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து இதில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேரும், திருத்தங்கலில் அண்ணா சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT