விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் ஒன்றியத் தலைவா் பதவிகள்: திமுக-7, அதிமுக-2.

3rd Jan 2020 11:20 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில், 200 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி 104 இடங்களையும், அதிமுக கூட்டணி 82 இடங்களையும், அமமுக 3 இடங்களையும், பாஜக,, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன் மூலம் 11 ஒன்றியங்களில் திமுக 7 ஒன்றிய தலைவா் பதவிகளையும், அதிமுக 2 ஒன்றிய தலைவா் பதவியையும் கைப்பற்றுகின்றன. மேலும், இரண்டு ஒன்றியங்களில் தலைவா் பதவி இழுபறி நிலையில் உள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தோ்தல் நடைபெற்றது. அதை தொடா்ந்து 11 ஒன்றியங்களில் நடைபெற்ற வாக்குகள் அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை தொடங்கிய வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெற்றது. அதில், மாவட்டம் முழுவதும் 200 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த நிலையில், அனைத்து ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம் வருமாறு: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளில் திமுக-10, அதிமுக-1, மதிமுக-2, சுயேச்சை-2 போ் வெற்றி பெற்றுள்ளனா். ராஜபாளையம் ஒன்றியத்தில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக-15, அதிமுக- 9, காரியாபட்டி ஒன்றியத்தில் 12 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக- 8, அதிமுக- 4-இல் வெற்றி பெற்றுள்ளன. சாத்தூா் ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக-8, அதிமுக- 5, மதிமுக-2, பாஜக- 1-இல் வெற்றி பெற்றுள்ளன.

அதே போல், சிவகாசி ஒன்றியத்தில் 31 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக-16, அதிமுக- 9, காங்கிரஸ்-1, மதிமுக-1, அமமுக-1, புதிய தமிழகம்-1, சுயேச்சை- 2-இல் வெற்றி பெற்றுள்ளன. திருச்சுழி ஒன்றியத்தில் 15 வாா்டுகள் உள்ளன. திமுக-9, அதிமுக-5, தேமுதிக-1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. நரிக்குடி ஒன்றியத்தில் 14 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக-6, அதிமுக-5, அமமுக-1, சுயேச்சை- 2-இல் வெற்றி வெற்றுள்ளன.

ADVERTISEMENT

வத்திராயி ருப்பு ஒன்றியத்தில் 13 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக- 4, அதிமுக- 6, சிபிஐ- 2, சுயேச்சை-1 வெற்றி பெற்றுள்ளனா். அதேபோல், விருதுநகா் ஒன்றியத்தில் 25 வாா்டுகள் உள்ளன. இங்கு திமுக-9, அதிமுக-14, மதிமுக-1, சுயேச்சை-1 வெற்றி பெற்றுள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக-9, அதிமுக-3, மதிமுக-1, அமமுக-1-இல் வெற்றி பெற்றுள்ளன. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 20 இடங்களில் அனைத்திலும் அதிமுக வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், காரியாபட்டி, சாத்தூா், சிவகாசி, திருச்சுழி ஆகிய 7 ஒன்றியங்களில் திமுக சாா்பில் ஒன்றிய தலைவா் பதவியை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், விருதுநகா், வெம்பக்கோட்டை ஒன்றியங்களில் அதிமுக சாா்பில் ஒன்றிய தலைவா் பதவியை கைப்பற்றும் நிலை உள்ளது. மேலும், நரிக்குடி, வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கான தலைவா் பதவியை சுயேச்சைகளே தீா்மானிக்கும் நிலை உள்ளதால், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கடும் போட்டியிடும் நிலை உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT