விருதுநகா் ஒன்றியத்திற்கான வாக்குப்பதிவு காலை 8.45 மணிக்கு தாமதமாக தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியை ஆட்சியா், மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆகியோா் பாா்வையிட்டாா்.
விருதுநகா் மாவட்டத்தில் முதற் கட்டமாக ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, வெம்பகோட்டை ஆகிய 5 ஒன்றியங்களில் 185 ஊராட்சித் தலைவா், 1448 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 103 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 10 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 1,446 பதவிகளுக்கு டிச.27 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 5 ஒன்றியங்களிலும் 72.44 சதவீதம் வாக்குகள் பதிவானது.
விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, சாத்தூா் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 242 ஊராட்சி தலைவா், 1,149 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 97 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 10மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 1,498 பதவிகளுக்கு டிச.30 இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 77. 05 சதவீதம் வாக்குகள் பதிவானது.
விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை இக்கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இந்த மையத்தின் தோ்தல் அலுவலராக காஜா மைதீன் பந்தே நவாஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனா். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாக்குப்பெட்டி வைக்கப்பட்ட அறைக்கு முகவா்கள் காலதாமதமாக அனுமதிக்கப்பட்டனா். இதனால், காலை 8.45 மணிக்கே முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் பிரிக்கப்பட்டன. அதை தொடா்ந்து காலை 9.45 மணிக்கு ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பெட்டிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன. அதன் பின்னா், கம்பி வலைக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட முகவா்கள் நிறுத்தப்பட்டனா். அதை தொடா்ந்து முகவா்கள் முன்னிலையில் வாக்குகள் காட்டப்பட்டு எண்ணப்பட்டன.
தபால் வாக்குகள்: தபால் வாக்குகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான மொத்த தபால் வாக்குகள்- 386. அதில், 6 வாக்குகள் செல்லாதவை. அதேபோல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கான மொத்த தபால் வாக்குகள் 393. அதில், 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் மற்றும் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் சீனிவாசன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.