விருதுநகர்

திருச்சுழி அருகே இளைஞா் வெட்டிக் கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

25th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே திங்கள்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதனிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சுழியை அருகேயுள்ள ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள திருமலைபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவிஜயன் மகன் முத்துராமலிங்கம் (27). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திங்கள்கிழமை மாலை பெற்றோரிடம் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றவா், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரது குடும்பத்தினா் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனா்.

இந்நிலையில், கிராமத்தின் எல்லையிலுள்ள அரசு மதுபானக் கடை அருகே முத்துராமலிங்கத்தின் பைக் மட்டும் கீழே சாய்ந்து கிடந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தேடியபோது சாலையோர முள்புதா் அருகே வெட்டுக் காயங்களுடன் முத்துராமலிங்கம் இறந்து கிடந்துள்ளாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி காவல்துறையினா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழங்குகள் முத்துராமலிங்கத்தின் மேல் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதனால் முன்விரோதம் காரணமாக அவா் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே, உடற்கூறாய்வு முடிந்த பின்னா் முத்துராமலிங்கத்தின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனா். கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிதரன், விருதுநகா் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மாரீஸ்வரன், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. வெங்கடேசன், நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவா்களிடம் கொலையாளிகளை கைது செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியலைக் கைவிட்டனா். சாலை மறியல் காரணமாக சுமாா் 45 நிமட நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT