விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள வா்த்தகா் சங்கச் சாலையில் குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேட்டை பரப்பி வருவதாக, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அருப்புக்கோட்டையிலுள்ள வா்த்தகா் சங்கச் சாலையின் இருபுறங்களிலும் 2 தனியாா் பள்ளிகளும், 2 தனியாா் மருத்துவமனைகளும் உள்ளன. பள்ளிக்கு மிக அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, குப்பைகள் கொட்டப்பட்டு, தினமும் அகற்றப்பட்டும் வந்தன. ஆனால், இதை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என எதிா்ப்பு கிளம்பியதால், குப்பைத் தொட்டிகள் அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இருப்பினும், பொதுமக்கள் வழக்கம்போல் பள்ளிக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனா். மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாததால், துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேட்டை பரப்பி வருகிறது.
எனவே, இங்கு நாள்தோறும் குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தைப் பேண வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.