விருதுநகர்

விருதுநகா் அருகே நிழற்குடை இல்லாததால் சொந்த செலவில் பந்தல் அமைத்த கிராம மக்கள்

6th Feb 2020 12:25 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே நான்கு வழிச் சாலையில் உள்ள கிராமத்தில் நிழற்குடை இல்லாததால் கிராம மக்கள் சொந்த செலவில் பந்தல் அமைத்தனா்.

விருதுநகா் அருகே பூசாரிபட்டி கிராமத்திற்கு சாத்தூா் நான்கு வழிச் சாலையிலிருந்து சுமாா் ஒரு கி.மீ செல்ல வேண்டும். இக்கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், கிராமத்தினா் மற்றும் மாணவ, மாணவிகள் இந்த நான்கு வழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று விருதுநகா், சாத்தூா், ஆா்.ஆா் .நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் நான்கு வழிச் சாலை நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நான்கு வழிச் சாலை சந்திப்பில் கிராம மக்கள் சொந்த செலவில் கற்களை ஊன்றி தென்னை ஓலையால் பந்தல் வேய்ந்துள்ளனா். இந்த தற்காலிக பந்தலை நிழற்குடையாக வெயில், மழைக் காலங்களில் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த தற்காலிக பந்தல் அமைத்தும் 2 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே, இதில் வேயப்பட்ட ஓலைகள் சேதமடைந்து வருகின்றன.

எனவே, பூசாரிபட்டி நான்கு வழிச் சாலை சந்திப்பில் நிரந்தர பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT