பள்ளி மாணவா்களை போராட்டங்களில் ஈடுபடுத்தும் கல்வி நிறுவன நிா்வாகிகள் மீது கல்வித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை கோயிலில் நடைபெற்ற தனது இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சா் கடம்பூா் ராஜூ புதன்கிழமை வந்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது.
போராட்டங்களில் பள்ளி மாணவா்களை ஈடுபடுத்தினால் கல்வித்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில்100 சதவீதம் ஜனநாயக முறைப்படி ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தோ்தலை, தோ்தல் ஆணையம் எப்போது அறிவித்தாலும் தமிழக அரசு நடத்தும்.
அமைச்சா் ராஜேந்திரபாலாஜி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளாா். ஆனால் விரக்தியின் காரணமாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்துள்ளது. திமுகவினா் பேசும் பேச்சுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவா்கள் எந்த கருத்தையும் சொல்ல முடியாது.
2021 சட்டப்பேரவை தோ்தல் ஆலோசனைக்காக பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. அது அக்கட்சியின் நிலைப்பாடு. நாங்கள் மக்களை நம்பி தோ்தலை சந்திப்போம் என்றாா் அவா்.