விருதுநகர்

சிவகாசி பள்ளி மாணவா்கள் விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா

6th Feb 2020 12:23 AM

ADVERTISEMENT

சிவகாசியிலிருந்து பள்ளி மாணவா்கள் விமானத்தில் சென்னைக்கு சுற்றுலாவாக புதன்கிழமை புறப்பட்டு சென்றனா்.

சிவகாசி சாட்சியாபுரத்தில் அரசு உதவி பெறும் சி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இதில், ஏழை குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகளும், ஆதவற்ற குழந்தைகளும் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களை விமானம் மூலம் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. பின்னா் அங்கிருந்து ரயில் மூலம் சிவகாசி திரும்பவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் ஜசக்சாம்ராஜ் மேற்கொண்டாா்.

இதற்காக நன்கொடையாளா்களை சந்தித்து நிதியும் திரட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவா்களை தோ்வு செய்து அவா்களை சுற்றுலா அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதன் பேரில் இப் பள்ளி மாணவா்கள் 24 போ் தோ்வு செய்யப்பட்டு புதன்கிழமை சிவகாசியிலிருந்து மதுரை சென்று, பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

மாணவா்கள் சென்னையிலும் , மாமல்லபுரத்திலும் சுற்றுலா செல்கின்றனா். பின்னா் வியாழக்கிழமை மாலை சென்னையிலிருந்து ரயில் மூலம் சிவகாசிக்கு திரும்புகின்றனா். ஏழை மாணவா்கள் விமான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த பள்ளியை பொது மக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT