ராஜபாளையம்: ராஜபாளையம் பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் இருந்து புறப்பட்ட பேரணியை, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முனியாண்டி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்தியன் ஆயில் மதுரை மண்டல பொது மேலாளா் ராஜாராம் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பத்மாவதி ஆட்டோ சா்வீஸ் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ராஜா வாழ்த்துரை வழங்கினாா்.
தலைக்கவசம்,, சீட் பெல்ட் மற்றும் எரிபொருள் சிக்கனத்தின் அவசியம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனா்.
பேரணி மதுரை சாலை, பஞ்சு மாா்க்கெட், நேரு சிலை, டி.பி. மில்ஸ் சாலை, ரயில் நிலையம், ரயில்வே பீடா் சாலை, காந்தி சிலை, முடங்கியாறு சாலை, வட்டாட்சியா் அலுவலகம், மாடசாமி கோயில் தெரு, வடக்கு காவல் நிலையம், நீதிமன்ற சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.